திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை முகாம் அலுவலர்களாக நியமித்தால், பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணிவாசகம் கூறியதாவது: வழிகாட்டு முறைப்படி இருப்பிடத்தில் இருந்து 20 கி.மீ., தூ ரத்திற்குள்தான் தேர்வு பணி வழங்க வேண்டும். ஆனால் 50 முதல் 60 கி.மீ., சுற்றளவில் பணி வழங்குகின்றனர். விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பட்டதாரி ஆசிரியராக இருந்து மாவட்ட கல்வி அதிகாரியானவர்களை, முகாம் அலுவலர்களாக நியமிக்க கூடாது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால், அந்த முகாம் பணியை புறக்கணிப்போம். விடைத்தாள் திருத்தல், தேர்வறை பணிக்கு ஊதிய உயர்வு அளித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும், என்றார். மாநில பொது செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன், மாவட்ட தலைவர் சலேத்ராஜா பங்கேற்றனர்.