தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது.
முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.
மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment