ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் இறைவனை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான். பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான்.