பேசுவதெல்லாம் கதை: எங்கள் சின்ன வய தில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு. வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக...