தண்டையார்பேட்டை, புனேவிற்கு, கல்வி சுற்றுலா சென்ற தண்டையார்பேட்டை பள்ளி மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி பலியாயினர்.
சென்னை, தண்டையார்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில், இ.சி.ஐ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி உள்ளது.இப்பள்ளியில் படித்த மாணவர்களில், 20 பேரை தேர்ந்தெடுத்து, தனியார் தொண்டு நிறுவனம், புனேவிற்கு, கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றது.
அதில், தண்டையார்பேட்டை, இந்திராகாந்தி நகரை சேர்ந்த, தமீம் அன்சாரியின் மகன், சஷீல் ரஜு, 13, நாவலர் குடியிருப்பை சேர்ந்த, கணேஷ் மகன் சந்தோஷ், 13, நேதாஜி நகரைச் சேர்ந்த, சுடலைகுமாரின் மகன் சரவணக்குமார், 13, ஆகியோரும் சென்றனர்.சென்னையிலிருந்து, 23ம் தேதி, விமானம் மூலம், மகாராஷ்டிராவிற்கு சென்றனர். நேற்று முன்தினம், புனேயிலிருந்து, 45 கி.மீ., துாரத்தில் உள்ள, முல்ஷி அணைக்கு, மாணவர்களை அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள, அணைக்கட்டு ஏரியில், ஐந்து மாணவர்கள் குளித்தனர்.
அப்போது சஷீல் ரஜு, சரவணக்குமார், சந்தோஷ் ஆகிய மூவரும், நீரில் மூழ்கி மாயமாகினர்.புனே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை, மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.பிரேத பரிசோதனை முடிந்து, மாணவர்களின் உடல்கள், சென்னைக்கு அனுப்பி பணி நடக்கிறது.இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இ.சி.ஐ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில், 10க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தால், சுற்றுலா ரத்து செய்யப்பட்டு, மாணவர்களை, சென்னை அழைத்து வரும் பணிகளை, பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.
கல்வித் துறை செயலருக்கு &'நோட்டீஸ்&'
சுற்றுலா சென்று, விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் விளக்கம் அளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு: கல்வி சுற்றுலாவுக்கு, மாணவர்களை, பள்ளி நிர்வாகம் அழைத்து சென்றது குறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், தனியார் பள்ளி முதல்வர் ஆகியோர், விரிவான அறிக்கையை, நான்கு வாரத்தில் அளிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லும் போது, கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு, அனைத்து பள்ளிகளுக்கும், வழிகாட்டு நெறிமுறைகளை, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment