ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள், "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார். தாகூர் தொடர்ந்து எழுதுகிறார், "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது" என்று. தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும், கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும், சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ? எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு துன்ப...