‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி
‘நீட்’ தேர்வு அமல்படுத்திய முன்பும், பின்பும் இரண்டாண்டு கால இடைவெளியில் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது. இதன் விபரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவானது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவானது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
குறிப்பாக தனியார் நீட் கோச்சிங் மையங்களில் பயின்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டி, ஓராண்டு படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலையும் நடக்கிறது. அதனால், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இன்னும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
இதனால் இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நீட் தேர்வு அமல்படுத்திய பின்பு தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைத்து நெல்லையைச் சேர்ந்த அப்பாவு ரத்தினம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மருத்துவ கல்வி இயக்குரகத்தில் சில தகவல்களை பெற்றுள்ளார். அதில், 2015 - 16ம் ஆண்டு தமிழ் வழியில் படித்த 456 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 54 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.
2016 - 17ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 438 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 99 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 2017 - 18ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 40 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 2018 - 19ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 88 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 18 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பாக 2015 - 16, 2016 - 17ம் கல்வி ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்த 1,047 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அதே, நீட் தேர்வு அமல்படுத்திய பின்பு 2017 - 18, 2018 - 19ம் கல்வியாண்டில் தமிழ்வழியில் பயின்ற 158 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் அமலுக்கு வந்த முன்னும், பின்னும் கிட்டத்தட்ட 2 கல்வி ஆண்டுகால இடைவெளியில் பார்த்தால் 889 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழ்வழி படித்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
நீங்க பண்ண எல்லாமே சரிவு தான. இந்த தேர்தல் உங்களுக்கு பெரிய சரிவா இருக்கும்
ReplyDeleteTeacherku tet
ReplyDeleteStudentsku neet
😆😆😆😆😆
Delete2013 டெட் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால் உங்க ஆட்சி அவ்ளோ தான்
ReplyDeleteஎல்லாரோட சாபமும் உங்கள சும்மா விடாது
ReplyDelete