பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் மற்றும் அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள், மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர், கோபி கூறியதாவது: புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்விகள், பொது தேர்வுகளில் அடிக்கடி இடம் பெற்ற கேள்விகளே, நேற்றைய வேதியியல் தேர்வில் இடம் பெற்றன. இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றதால், எளிதாக பதில் எழுதினர். சில கேள்விகளுக்கு மட்டும், மாணவர்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது: ஏ - பிரிவு வினாக்களில், 1, 18 ஆகிய ஒரு மதிப்பெண் கேள்விகளும், 41, 47 ஆகிய, மூன்று மதிப்பெண் கேள்விகளும், மாணவர்களின் புரிந்து படிக்கும் கற்றல் திறனை சோதிப்பதாக இருந்தன. நன்றாக படித்த மாணவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 140 மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்டம் அதிகரிக்கும் : பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று அக்கவுன்டன்சி என்ற கணித பதிவியல் தேர்வு நடந்தது. ஆண்டுதோறும், இந்த தேர்வில் சில வினாக்கள் அல்லது விடைக்குறிப்புகளில் பிழை இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வினாத்தாள் குழப்பம் இன்றி, மிக தெளிவாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஏ.பி.பழனி கூறுகையில், &'&'இதுவரை இல்லாத அளவுக்கு, மிக எளிமையான கேள்விகள் இடம் பெற்றன. புத்தகங்களில் உள்ள உதாரண கேள்விகள், வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்த கேள்விகள், அதிகம் இருந்தன. 2017ஐ விட, இந்த ஆண்டு அக்கவுன்டன்சியில் அதிக மாணவர்கள், &'சென்டம்&' எடுக்க வாய்ப்புள்ளது,&'&' என்றார்.
Comments
Post a Comment