மரணத்தைக் கண்டு பயப்படாதே; கடமையாற்றும்போது மரணம் வருமானால், அதனை வரவேற்று எதிர் கொள்ளத் தயாராக இரு!' என்றார் அண்ணல் காந்தி. இது அடுத்தவருக்கு விடுத்த அறிவுரை மட்டுமல்ல; தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார் அந்த விந்தை மனிதர்.
மகாத்மா மறைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இந்த மண்ணில் வாழ்ந்தது (2.10.1869 முதல் 30.1.1948 வரை) 78 ஆண்டுகள் 3 மாதம் 28 நாட்கள். 1893-இல் 24- ஆவது வயதில் தொடங்கிய அவரது பொது வாழ்க்கை, 54 ஆண்டுகள் நீடித்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் எதிர் கொண்ட மரணத் தாக்குதல்கள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஒன்பது. அனைத்தையும் துணிவோடும், மகிழ்வோடும் எதிர் கொண்டார். 1948-இல் (30.1.1948) நடைபெற்ற இறுதித் தாக்குதலில்தான், அண்ணல் இறைவனடி சேர்ந்தார்.
1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திஜி இந்தியாவிலிருந்து மீண்டும் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்குத் திரும்புகிறார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள், வெள்ளையர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை காந்திஜி இந்தியாவில் பரப்பினார் என்ற செய்தியால், வெள்ளையர்கள் கோபத்தில் இருந்தார்கள். டர்பனில் கொதித்து நின்ற கூட்டத்தைக் கண்டு, கஸ்தூரிபாவையும் இரண்டு மகன்களையும், அடுத்தவர் அறியா வண்ணம், ஒரு தனி வண்டியில், நண்பர் ரஷ்டம்ஜியின் வீட்டுக்கு அனுப்பினார். தாமதித்து வெளியில் வந்த காந்தியைப் பார்த்த கூட்டத்தினர், அவர் மீது கற்களையும் அழுகிய முட்டைகளையும் வீசினார்கள்.
இத்தாக்குதல் பற்றி காந்திஜி தனது சுயசரிதையில் விவரிக்கிறார். "ஒருவர் என் தலைப்பாகையைப் பிடுங்கினார்; மற்றவர்களோ என்னை கைகளால் அடித்தார்கள், காலால் உதைத்தார்கள்; நான் மயக்கமுற்று விழுந்தேன்.' காவலர்கள் அவர் உயிரைக் காத்தனர். இது தான் காந்திஜியின் மீது கூட்டமாக நடத்தப்பட்ட முதல் கொலை வெறித் தாக்குதல்.
இரண்டாவது கொலை வெறித் தாக்குதல் 10.2.1908 அன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள், தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்; தவறினால் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. காந்திஜியின் தலைமையில் போராடத் தயார் ஆனார்கள் ஆசியர்கள். ஜெனரல் ஸ்மட்ஸ் காந்திஜியின் தலைமையிலான குழுவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இறுதியில் சமரச உடன்பாடு உருவாகியது. "தாங்களாகவே முன்வந்து பதிவு செய்தால், கருப்புச்சட்டம் ரத்து செய்யப்படும்'என்பதே அதன் உயிர் வாசகம். ஆனால் இந்த உடன்பாடு திருப்தி அளிக்கவில்லை ஒரு பிரிவினருக்கு. 31.1.1908 அன்று கூட்டம் நடத்தி விளங்கினார் அண்ணல் காந்தி.
அக்கூட்டத்தில் மீர் ஆலம் என்ற வாட்டசாட்டமான பட்டாணியன், 6 அடி உயரம் உள்ளவன் எழுந்தான். காந்திஜியைப் பார்த்துக் கைகாட்டி, "நீ இந்திய சமூகத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டாய். 15,000 பவுண்டு கையூட்டு வாங்கிவிட்டாய். பதிவு செய்யச்செல்லும் முதல் நபரை நானே கொன்றுவிடுவேன். இது அல்லாவின் மீது ஆணை' என உரக்கக் கத்தினான். அது கேட்ட காந்திஜி, "அடுத்தவரைக் கொல்வதற்கு அல்லாவின் மீது சூள் உரைப்பது தகாதது. பதிவு செய்யச்செல்லும் முதல் நபர் நான்தான். நோயால் அல்லது உடல் நலிவால் சாவதைவிட, ஒரு சகோதரனின் கையால் சாவதை நான் மகிழ்வோடு ஏற்பேன்' என்றார்.
1908 பிப்ரவரி 10- பாரிஸ்டர் காந்தி தம்பிநாயுடு போன்ற சகாக்களுடன் பதிவாளர் அலுவலகம் நோக்கி நடந்தார். பின்னால் தொடர்ந்த மிர் ஆலம், "எங்கே போகிறாய்!' எனக் கேட்டான். காந்திஜி பதில் சொல்லும் முன், கையிலிருந்த இரும்புக்குழாயால் அவர் தலையில் ஓங்கி அடித்தான். மயங்கிக் கீழே விழுந்தார் காந்தி. அதன் பின்னும் பட்டாணியர்கள் அடித்தார்கள். காலால் மிதித்தார்கள். காந்திஜி இறந்துவிட்டதாக எண்ணி, அடிப்பதை நிறுத்தினார்கள். தம்பி நாயுடுவும், பிற ஆங்கிலேயர்களும் தடுக்கப் பார்த்தார்கள், முடியவில்லை. கூட்டம் கூடியதும் ஓடிப்போனார்கள் பட்டாணியர்கள். காந்தி அருகிலிருந்த அலுவலகத்துக்கு தூக்கிச் செல்லப்பட்டார். உடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பத்து நாட்கள் சிகிச்சை தொடர்ந்தது. உயிர் பிழைத்தார் காந்தி. நினைவு திரும்பியதும் முதல் காரியமாக, "மிர் ஆலம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்று அட்டர்னி ஜெனரலுக்கு தந்தி அனுப்பினார் காந்திஜி.
அடுத்த ஒரு மாதத்திற்குள் 3-ஆவது தாக்குதலுக்கு உள்ளானார். அது நடந்த நாள் 5.3.1908; நடந்த இடம் டர்பன் நகர். அங்கு அன்று மாலை இந்திய மக்கள் மத்தியில் உரை ஆற்றினார். இரவு நெருங்கியது; கூட்டமும் முடிந்தது. எதிர்பாராத விதமாக விளக்குகள் அணைந்தன. அப்பொழுது முரட்டுத் தோற்றம் கொண்ட பட்டாணியன் மேடையை நோக்கி ஓடிவந்தான். கையிலிருந்த நீளக்கட்டையை சுழற்றியபடி காந்தியை நெருங்கி கையை ஓங்கினான். இதனை எதிர்பார்த்த கூட்ட நிர்வாகிகள், காந்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். வட்டமிட்டுப் பாதுகாத்தார்கள். இதை "தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
நான்காவதாக நிகழ்ந்த தாக்குதல் முற்றிலும் வித்தியாசமானது. அது உடல் ரீதியான பிறரின் தாக்குதல் அல்ல; மன அளவில் அவர் பாதிக்கப்பட்டார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தை உயிர்ப்பிக்க முடியவில்லை. ஆகவே மனத்தளர்ச்சி.
125 வயது வரை வாழ்வேன் என அறிவித்திருந்தவர் காந்திஜி. ஆனால் 13.4.1928-க்கு முன்னதாகவே நான் இறந்துவிடுவேன் என்று நெருக்கமானவர்களிடம் சொன்னார். தனது மரணம் நெருங்குகிறது. அது நடக்கும் நாள் 17.3.1928 ஆக இருக்கும் என்றும் சொன்னார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர் பி.சி.ராய் அவர் சிறிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார். அவரது உடல் நலம் தேற இறைவனை வேண்டி தந்திகள் பறந்து வந்தன; என்ன ஆச்சரியம்! அவர் குறித்த நாளும் கடந்தது. உடல் நலம் தேறியது, ஆபத்திலிருந்து ஆண்டவன் அருளால் மீண்டார். அப்பொழுது ராஜாஜிக்கு அவருக்கே உரிய பாணியில் எழுதிய கடிதத்தில்; "நான் மார்ச் 17-ல் மரணமடையவில்லை என்பதில் பலருக்கு வருத்தம். அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒருவிதத்தில் நான் மரணத்தை சந்தித்துவிட்டேன்' என எழுதினார்.
ஐந்தாவது, ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சி. அது நடந்தது 25.6.1935 அன்று. அக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் காந்திஜி. அன்றைய தினம் இன்றைய புணேவுக்கு காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். பழைமைவாத இந்துக்கள் கருப்புக் கொடி காட்டினார்கள். அவர் பயணித்த காரை நோக்கி வெடிகுண்டு வீசினார்கள். ஆனால் காந்தியின் காரில் வீசாமல், உடன் சென்ற வேறு காரின் மீது குறிவைத்துவிட்டார்கள். காந்திஜி உயிர் தப்பினார்.
ஆறாவதாக, மரணவாயிலில் நுழைய இருந்தது, அண்ணல் தானாக மேற்கொண்ட 21-நாள் உண்ணாவிரதத்தால். அவர் உண்ணாவிரதம் தொடங்கியது 9.2.1943 அன்று. அப்பொழுது அவர், இருந்தது ஆகாகான் அரண்மனைச் சிறையில்; அவரது வயது 74, உடலோ மிக நலிந்த நிலையில். 21நாள் உண்ணா நோன்பை இவரால் தாங்க முடியாது என்று எல்லோரும் அஞ்சினார்கள்.
சில நாட்களிலேயே அவர் சோர்ந்துவிட்டார். அவரது நிலை கவலைக்கு இடமானது. நாடித் துடிப்பு வீழ்ந்து வந்தது. மயக்க நிலையை அடைந்துவிட்டார். அவர் இறந்து விட்டால் அரசு நிலைமையை எப்படி சமாளிக்க வேண்டும். எங்கே இறுதிச்சடங்கு நடத்துவது; யூனியன் ஜாக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடக்கூடாது. காந்தியின் மனைவிக்கு அனுதாபச் செய்தி அனுப்பக்கூடாது என்ற முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டன.
என்ன ஆச்சரியம்! கடைசி வாரத்தில் காந்திஜியின் உடல் மீண்டும் தேறியது; தெம்பு வந்தது. 21-ஆம் நாள், கஸ்தூரிபாவின் கையிலிருந்து, பழரசம் அருந்தினார். மரணத்தின் பிடியிலிருந்து மீண்டும் மீண்டார் மகாத்மா.
அடுத்த அபாயத்தை அண்ணல் 29.6.1946 எதிர்கொண்டார். அன்று நள்ளிரவில் புணேவுக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலைக் கவிழ்ப்பதற்காக வழிப்பாதையில் பெரும் பாறாங்கல் போடப்பட்டிருந்தது. ரயில் அக்கல்லில் மோதி தடம்புரண்டு நின்றது. சேதம் ஏதும் இல்லை. அடுத்த நாள் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில், "இறை அருளால் 7-ஆவது முறையாக இறப்பின் வாயிலிலிருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன்!' எனப் பேசினார் காந்திஜி.
எட்டாவது முறையாக அண்ணலின் மீது குறிவைக்கப்பட்ட நாள் 20.1.1948 ஆகும். அக்கால கட்டத்தில் மேற்கு பாகிஸ்தானில், இந்துக்கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளாவதன் எதிர் வினையாக, தில்லி மாநகரம் கலவர பூமி ஆனது. இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்! கவலையுற்ற காந்தி, முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், 13-ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். தில்லி மாநகரப் பெருமக்களும், நிறுவனங்களும் அளித்த வாக்குறுதியை ஏற்று 18-ஆம் தேதி உண்ணா நோன்பை கைவிட்டார். ஆனால் 20-ஆம் தேதியன்று, நடைபெற்ற பிரார்த்தனைச் கூட்டத்தின் போது ஒரு கைவெடிகுண்டு வீசப்பட்டது, ஆனால் குறி தவறிவிட்டது; காந்திஜி தப்பினார்.
அண்ணல் எதிர்பார்த்த இறுதி முடிவு அடுத்த 10 நாட்களில் அவரைத் தழுவியது. 1948 ஜனவரி 30 - அவரது வாழ்வின் கடைசி நாளாக அமைந்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்திற்குப்புறப்பட்டார். வழக்கத்திற்கு மாறாக 10 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டார்.
எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு முரட்டு இளைஞன் அருகிலிருந்தவர்களைத் தள்ளிவட்டு முன்னேறுகிறான். காந்திஜியை நெருங்குகிறான். மனு காந்தி அவனைத் தடுக்க முயற்சிக்கிறார். அவனோ மனுவின் கைகளைத் தட்டி விடுகிறான், அவளது கையிலிருந்து பொருட்கள் தவறிக் கீழே விழுகின்றன. அவற்றை கீழே குனிந்து எடுக்க முயற்சிக்கிறார். அதற்குள்ளாக அந்த இளைஞன் தன் கைத்துப்பாக்கியால் காந்திஜியை நோக்கி, 3 முறை சுடுகிறான்.
அண்ணலின் உதடுகளிலிருந்து "ஹே! ராம்!' என்ற வார்த்தை மட்டும் வெளிவருகிறது. அவரது வெள்ளை வேட்டி சிவப்பாகிறது. மண்ணில் சாய்கிறார் மகாத்மா. கூட்டத்தை நோக்கி கும்பிட்ட இரு கைகளும் கீழே விழுகின்றன. அந்த மகாத்மாவின் கடைசி மூச்சு சரியாக மாலை 5-17 மணிக்கு நின்று விடுகிறது. மரணத்தைத் தழுவுகிறார் மகாத்மா! எட்டு முறை மரணத்தைத் எதிர்கொண்ட அம்மகான் ஒன்பதாவது முறையும் எதிர்கொண்டார்.
மரணத்தைக் கண்டு கலங்காத மகாத்மா இந்த முறை காலத்துடன் கரைந்தார்.
இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்.
Comments
Post a Comment