நிகழாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 -ஆவது பெளர்ணமி தினமான புதன்கிழமை (ஜன.31) நிகழ உள்ளது. இதனை எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்ற உள்ளன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
சந்திர கிரகணம்: நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது.
பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் வரும்.
முதல் சந்திர கிரகணம்: இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், பெளர்ணமி நாளான புதன்கிழமை வருகிறது. இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும்.
அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இதனை முழுமையாக பார்க்க முடியாது.
முழு கிரகணம் எப்போது: சூரியன், பூமி, நிலவு ஆகியவற்றின் சுற்றுப் பாதையில், நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி நட்ட நடுவில் வரும்போது, அதன் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழுந்து, அதை முழுமையாக மறைத்து முழு சந்திர கிரகணத்தை ஏற்படுத்துகிறது. அப்படியின்றி பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதி மீது மட்டும் விழும் காலங்களில் அது பகுதி சந்திர கிரகணமாக வருகிறது.
கிரகண நிகழ்வு: இந்தியாவில் புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல், நிலவின் மேல் மெதுவாக விழத் தொடங்கும். இது பகுதி சந்திர கிரகணமாகும். மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். இரவு 7.37 மணி முதல் பூமியின் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும், இரவு 9.38 மணிக்கு பிறகுதான் நிலவு அதன் முழு ஒளியுடன் 'சூப்பர் மூன்'னாக பிரகாசிக்கும்.
சூப்பர் மூன்: இந்த கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே 'சூப்பர் மூன்' எனப்படுகிறது.
சிவப்பு நிலா தோன்றுவது ஏன்?: சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இவற்றில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான் முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.
ப்ளூ மூன்: 'ப்ளு மூன்' என்றதும் இந்நாளில் நிலவு நீல நிறமாக தோன்றுமா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் நிலவு நீல நிறமாக தோன்றாது. இதுவொரு பேச்சு வழக்கு. ஒரே மாதத்தில் இரு பெளர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பெளர்ணமியின் போது தோன்றும் நிலவு பேச்சு வழக்கில் 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது.
Comments
Post a Comment