உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று பல இடங்களில் பரவலான மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்.
Published : 29 Oct 2017 08:49 IST
Updated : 29 Oct 2017 08:49 IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமாகவும் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு, மிதமான மழை பெய்யும்.
நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக காங்கேயம், அருப்புக்கோட்டை, நத்தத்தில் தலா 7 செமீ, சேரன்மாதேவி, பெரியார், விருதுநகரில் தலா 6 செமீ, மேலூர், கடலூர், உடுமலைப்பேட்டை, பெரியகுளம், பழனி, கோபிசெட்டிப்பாளையத்தில் தலா 5 செமீ, பேச்சிப்பாறை, சாத்தூர், திருமங்கலம், காரைக்கால், பாளையங்கோட்டை, வேதாரண்யம், சங்கரன்கோவில், கோத்தகிரி, அரண்மனைபுதூர், பெருந்துறை, வானூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment