இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்காலத்தின்போது பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தும் மின்கசிவு காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதையும் மாணவர்கள் காயமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்த நிலையிலும் பல கட்டடங்கள் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் இதுபோன்ற கட்டடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவங்களும், உயிரிழப்புகளும் முந்தைய காலங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் நீண்ட காலமாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் அந்த கட்டடங்கள் காரணமாக உள்ளன. எனவே, இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பழைய கட்டிடங்களை உடனடியாக அப்புறப் படுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக இருப்பின் வட்டார வளர்ச்சி அதிகாரிகளையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரி களையும் பழைய கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பில் இருந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
மழைநீர் ஒழுகும் கட்டடங்கள்... இதேபோன்று பருவமழையால் பள்ளி வளாகங்களில் எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் ஆகியோர் சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளனர்.
Comments
Post a Comment