பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?- ராமதாஸ் கண்டனம்
தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைப்படி 2015-16ஆம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு இரு ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது. பி.எட். படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் விருப்பப் பாடங்களாக இருந்தன. ஆனால், பி.எட். படிப்பு ஈராண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்ட பின்னர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.
இளநிலைப் பட்டப்படிப்பு முடித்து பி.எட் பயிலும் அனைவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு விருப்பப் பாடங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில் பி.எட். பட்டம் படிப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மொழியை தேர்வு செய்வதே வழக்கமாகும். ஆனால், பி.எட். ஈராண்டு படிப்பாக மாற்றப்பட்ட பின்னர் பட்டப்படிப்பில் எதை முதன்மைப் பாடமாக படித்தார்களோ அதை மட்டும் படித்தால் போதுமானது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மிகக் கடுமையாக பாதித்து விடும். இது வருங்கால தலைமுறையினரின் கல்வியை பாதிக்கக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் தவிர மீதமுள்ள அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் தான் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. இதனால் அறிவியல், கணிதம் படித்த ஆசிரியர்களும் பல நேரங்களில் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழ் மொழிப் பாடத்தை நடத்துவதாக இருந்தாலும், பிற பாடங்களை தமிழ் வழியில் நடத்துவதாக இருந்தாலும் பி.எட். படிப்பில் தமிழ் மொழியை விருப்பப்பாடமாக படித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில், பொதுத் தமிழ் எனப்படும் அப்பாடத்தில் தான் தமிழையும், தமிழ் மொழிவழியில் பிறப்பாடங்களையும் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடம் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழையும், தமிழ் மொழிப் பாடங்களையும் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். உண்மையில் ஜெயலலிதாவின் அரசும், ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறப்படும் பினாமி அரசும் தமிழை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் தான் ஆர்வம் செலுத்துகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2010 ஆண்டில் முதன்முறையாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 5189 அரசு பள்ளிகளில் 1.03 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் மேலும் சில ஆயிரம் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின் மீதமுள்ள பள்ளிகளில் எவ்வளவு பள்ளிகளில் முடியுமோ, அவ்வளவு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
இவ்வாறாக தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வரும் அதிமுக அரசு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம் தமிழுக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment