பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பெற்றோர் இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், அதுபற்றிய இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி சென்னையில் தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் தொடக்கவிழா, ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன், தலைவர் மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எம்.முரளி, இயக்குனர் (உயிர்தொழில்நுட்பம்) ஜி.என்.ஹரிஹரன், முதன்மை விஞ்ஞானி நா.பரசுராமன், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியலை பற்றிய ஆர்வத்தையும், அவர்களுக்கான அறிவியல் கருத்துகளை புரிந்து கொள்ளுதலையும் பலப்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கற்றல் இழப்பு அபாயம் நிகழ்ச்சி முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு மாநிலத்திலும் நோய்த் தொற்று, பெற்றோர், மாணவர்களின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பள்ளிகளை திறக்கலாம் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா தொற்று அபாயத்தைவிட, கற்றல் இழப்பு அபாயம் அதிகளவில் இருக்கிறது. அந்தவகையில் நம்முடைய மாநிலத்தில் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற அக்கறையில்தான் முதல்-அமைச்சர் முடிவுகளை எடுத்துவருகிறார்.
முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்
ஏற்கனவே மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்ட அறிக்கையை முதல்-அமைச்சரிடம் வழங்கி இருக்கிறோம். அதேபோல், பொது சுகாதாரம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பெற்றோர் இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள். சீக்கிரம் பள்ளிகளைத் திறங்கள் என்று ஒரு சாரரும், இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கிறீர்களே என்று மற்றொரு சாரரும் சொல்கிறார்கள். பள்ளிகளுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. பள்ளிகளை திறந்து வைக்கிறோம். யார் யார் வர விருப்பப்படுகிறார்களோ அவர்கள் வரலாம் என்றுதான் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment