தடுப்பூசியால்
இலட்சத்தில் ஒருவருக்கு
இப்படி நடக்கலாம் என்கிறார்கள்
நமக்குத் தெரியாது
என்ன நடந்தது என்று
ஆனால் இலட்சத்தில் ஒருவனுக்கு
அப்படி நடக்கக் கூடாது
விவேக் இறந்துவிட்டார்
சாப்ளின் இறப்பார் என்று
யாரும் எப்படி நம்பவில்லையோ
அதே நம்பமுடியாத வழியில்
விவேக்கும் இறக்கிறார்
மோனாலிசாவின் மர்மபுன்னகை
இரண்டாம் முறையாக உறைகிறது
ஒரு பாடகன் இறக்கிறான்
அக்கணம் எப்போதையும்விட
அவனது சங்கீதம் உரத்து ஒலிக்கிறது
ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கிறான்
அவனைச் சுற்றியிருந்த
எல்லாச் சிரிப்பும் ஒடுங்கிவிடுகிறது
ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கும்போது
அவனைப்பற்றிச் சொல்ல எதுவுமில்லை
ஆனால் என்னைப்பற்றிச் சொல்ல
ஏராளம் இருக்கிறது
நான் ஒரு அவமானத்தில்
தலைகுனிந்து வெளியேறும்போது
அவன் ஒரு நகல் ரவுடியாக
மீசையை முறுக்கும் காட்சி
நினைவுக்கு வந்ததும்
வாய்விட்டு சிரித்து விட்டேன்
நான் கைவிடப்பட்ட ஒரு துயரத்தில்
என் தற்கொலைப்பாதையில்
நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு நவநாகரிக இளைஞனாக
அவன் பேசும் ஆங்கிலம் நினைவுக்கு வந்ததும்
புன்னகையுடன் திரும்பிவந்துவிட்டேன்
வாழ்க்கையின் சிக்கலான
புதிர்வட்டப்பாதையில்
நான் சுழன்றுகொண்டிருந்த நாளில்
அவன் ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரனுக்கு
எட்டுப் போட்டுக் காட்டும் காட்சியில்
என மனம் இலகுவாகிவிட்டது
அழவைப்பதற்கு
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
சிரிக்க வைப்பதற்கு
யாரோ சிலர்தான் இருக்கிறார்கள்
பார்த்துச் சிரிப்பதற்கான
அபத்தங்களுக்கு பஞ்சமேயில்லை
சிரிக்கக் கற்றுதருபவர்களில்
ஒருவன் இல்லாமல் போகிறான்
நமக்கு நிறைய
சிரிப்பு தேவைப்படும் காலத்தில்
ஒரு சிரிக்கவைப்பவன் இறக்கக்கூடாது
இவ்வளவு இருள் நிரம்பிய காலத்தில்
ஒரு விளக்கு அணைந்திருக்கக்கூடாது
என் கனவுகளில் வர ஸ்ரீதேவி இல்லை
என் காதில் ஒலிக்க எஸ்.பி.பி இல்லை
என் துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை
இப்படியே போனால்
இனி நான்
தனியாகத்தான்
சாகவேண்டும் போலிருக்கிறது
17.4.2021
காலை 8.34
மனுஷ்ய புத்திரன்..
Gudnoon to everyone, happy sunday..
ReplyDeleteGood night madam
ReplyDeleteGudnyt friend..
DeleteSuper thought admin mam
ReplyDelete🙂
Delete