தமிழகத்தை வரும் 25-ம் தேதி புயல் தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.
- NEWS18 TAMIL
- LAST UPDATED: NOVEMBER 22, 2020, 11:41 PM IST
- NEWS DESK NEWS18 TAMIL
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் அறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி இன்னும் 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) அன்று அது புயலாக மாறி தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன.
புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும். கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 25-ந்தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும். அதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கனமழை இருக்கும்.
Comments
Post a Comment