தீவிர புயலாகிறது ‘நிவா்’: 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்3 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைகிறது. மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, கீழ்திசை காற்றின் வேக மாறுபாடு ஆகியவற்றால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் பலத்த மழைப்பொழிவும் இருந்தது.
ADVERTISEMENT
இதற்கிடையில், தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் கடந்த சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, ஞாயிற்றுக்கிழமை அன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டது. அது திங்கள்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இது, செவ்வாய்க்கிழமை வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக மாறவுள்ளது.
மூன்று நாள்களுக்கு மழை: இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, செவ்வாய்க்கிழமை தீவிர புயலாக வலுவடையக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து, தற்போதைய நிலவரப்படி வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும்.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (நவ.24) முதல் வியாழக்கிழமை (நவ.26) வரை மூன்று நாள்களுக்கு மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் அதி பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகரின் சில பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம் 120 கி.மீ.: செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது, பலத்த காற்று மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
கடல் அலை உயரும்: தமிழக கடலோரப் பகுதிகளில் நவம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். கடல் அலைகள் இயல்பைவிட 2 மீட்டா் வரை எழும்பக்கூடும். புயல் எந்த திசையில் செல்லும் என்பது அதன் தன்மையில் ஏற்படும் மாற்றத்தை வைத்து அமைகிறது. புயலை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து வருகிறது என்றாா் அவா்.
நவம்பா் 24: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.24) இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பா் 25: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (நவ.25) அதி பலத்த மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, கரூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பா் 26 : வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.26) ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ வேகத்திலும், இடையிடையே 120 கிலோமீட்டா் வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வரும் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை அளவின் தீவிரம்:
2.5 மி.மீ. முதல் 15.5 மி.மீ. வரை பெய்யும் மழை அளவு லேசான மழை என்றும், 15.6 மி.மீ. முதல் 64.4 மி.மீ. வரை பெய்யும் மழை அளவு மிதமான மழை என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோல, 64.4 மி.மீ. முதல் 115.5 மி.மீ. முதல் வரை பெய்யும் மழை அளவு பலத்த மழை என்றும், 115.6 மி.மீ. முதல் 204.4 மி.மீ. வரை மழை அளவு மிக பலத்த மழை என்றும், 204 மி.மீ. மேல் பெய்யும் மழை அளவு அதி பலத்த மழை என்றும் குறிப்பிடப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment