அக்.10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் விருப்பத்தின்பேரில் வரலாம் என அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் தொடர் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் இறுதியாண்டுத்தவிர அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளை திறக்கவும், விருப்பமுள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசாணையில் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:
கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4-வது பொதுமுடக்கத் தளர்வு ஆணையில் 50% ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 21 ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டது.
அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12 மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் அக்.1-ம் தேதி முதல் ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும்.
இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும்'. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment