144 தடை உத்தரவு காலகட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பால் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்மா உணவகங்கள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட உள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, அரசு துறை தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும்.கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் ஆகியவை செயல்படலாம்.
ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் செயல்படலாம்.போதிய இடைவெளியுடன் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படலாம். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், சுகாதாரம் தொடர்பாக பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் ஆகியவை செயல்படலாம்.
உணவுப் பொருட்கள், பால், ரொட்டி, பழங்கள், காய்கறிகள், மாமிசம், முட்டை, மீன் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு. ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படலாம்.
உணவகங்கள், நுகர்வோருக்கு பார்சல் செய்து கொடுக்கும் வகையில் செயல்படலாம்.. தேநீர் கடைகள் செயல்படலாம். ஆனால், மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும்
மின்னணு வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்விக்கி, ஷொமாட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. வேளாண்மை தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள் செயல்படலாம். அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்படலாம்.
லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கலாம்.மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்களை இயக்கலாம்.மின்சாரம், குடிநீர் விநியோகம், தபால், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. குடோன்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் செயல்படும்.
கடைகளுக்கு வரும் மக்களுக்கு இடையே 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகர பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்சாக்கள், கால் டாக்சிகள், மெட்ரோ ரயில்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை செயல்படாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment