தினந்தோறும் பள்ளியிலேயே தியானம் செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்!' - ஃபிட் இந்தியாவின் அறிவுரை.
மத்திய அரசு சார்பில், உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக `ஃபிட் இந்தியா' என்ற இயக்கம், கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பாக மார்ச் மாதம் முழுக்க, மனநல ஆரோக்கியத்துக்கான மாதமாக அனுசரிக்கப்படவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக, மார்ச் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே மனநல ஆரோக்கியத்துக்கான சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில், கல்வித்துறை சார்பில் இந்தியா முழுவதிலுமுள்ள பள்ளிகளுக்கு சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை,
* அடுத்த மாதம் முழுக்க, பள்ளி வேலை நாள்களின்போது ஏதேனும் 5 நிமிடங்களுக்கு பள்ளியிலேயே மாணவர்கள் தூங்க அனுமதிக்கப்பட வேண்டும். Power Nap எனப்படும் குட்டித்தூக்கம் கிடைக்கப்பெற்றால், மாணவர்களால் புத்துணர்வோடு செயல்பட முடியும் என்ற அடிப்படையில், இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது.
* மூளையை உற்சாகப்படுத்தும் விதத்திலான, இண்டோர் விளையாட்டு வகைகளான குறுக்கெழுத்து, சுடோகோ, வார்த்தை விளையாட்டுகள் போன்றவற்றுக்கு மாணவர்களை அன்றாடம் உட்படுத்த வேண்டும்.
இதே ஃபிட் இந்தியா இயக்கம் சார்பில், இந்த பிப்ரவரி மாதம் முழுக்க திங்கள்கிழமைகள் யாவும் `Majical Mondays' என்ற அடைமொழியுடன் அந்தந்த மாநிலத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளோடு தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதன்படியே அனைத்தும் பின்தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஏப்ரல் மாதம் முழுக்க, தினமும் ஏதேனும் 10 நிமிடங்களுக்கு பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், ஜூனில் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் இப்போதே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றோடு சேர்த்து, எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள்!
Comments
Post a Comment