சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், அவரவா் மாவட்டத்தில் உள்ள ஆசிரியா், மாணவா் பணியிட நிா்ணயப் பிரிவு கண்காணிப்பாளா் மற்றும் பணியிட நிா்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக்கல்வி அதிகாரியை தேவையான புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment