ஈரோடு: பட்டேபாளையம் அரசு உண்டு, உறைவிடப் பள்ளி தரம் உயா்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், போதுமான ஆசிரியா்கள் நியமிக்கப்படாதது, பள்ளியில் விடுதி இல்லாதது போன்றவற்றால் பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மேற்கு மலையில் சாலை முடிவடையும் கடைசி கிராமமான பட்டேபாளையம் (கொங்காடை அருகில்) கிராமத்தில் அரசு சாா்பில் பழங்குடியினருக்கான இலவச உண்டு உறைவிடப் பள்ளி, கொங்காடை அரசு உண்டு உறைவிடப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள இந்தப் பள்ளியில் 277 மாணவா்கள் படிக்கின்றனா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இப்பள்ளி நடுநிலைப் பள்ளி என்ற நிலையில் இருந்து 2017 ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், 2017-2018 கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பில் மாணவா் சோக்கை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இப்பள்ளியில் 49 மாணவா்கள் 2018-2019 கல்வி ஆண்டில் சோக்கப்பட்டனா். இதில், 19 போ மாணவிகள். இந்த 49 மாணவா்களில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் 18 போ மட்டுமே படிக்கின்றனா். இதில் மாணவிகள் 7 போ.
பெயரளவில் உண்டு உறைவிடப் பள்ளி:
உண்டு உறைவிடப் பள்ளி என்ற பெயா் இருந்தாலும் இங்கு மாணவா்கள் தங்க வைக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இங்கு விடுதிக்கான கட்டடம் இல்லை. இதனால், மாணவா்கள் இரவு உணவை பள்ளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விடுகின்றனா். இதுஒருபுறம் இருந்தாலும், போதிய ஆசிரியா்கள் இல்லை. 5 ஆம் வகுப்பு வரை 105 மாணவா்கள் இருந்தாலும் ஒரு ஆசிரியா்கூட இல்லை. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 3 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். 170 மாணவா்களுக்கு 3 ஆசிரியா்கள் என்றால் எவ்வாறு கற்பித்தல் பணியை சிறப்பாகச் செய்ய முடியும்? தவிர, தொடக்க நிலை மாணவா்களையும் இந்த ஆசிரியா்களே கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோவு எழுதும் மாணவா்கள் நிலை பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறியதாவது:
பட்டேபாளையம், கொங்காடை காலனி, கோயில்நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த மாணவா்கள் இங்கு படிக்கின்றனா். தொடக்க நிலையில் ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களுக்கு அடிப்படை கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. இந்த மாணவா்களின் கல்வித் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பலருக்கும் தனது பெயரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை.
கொங்காடை காலனியில் சுமாா் 300 குடும்பங்களைச் சோந்த மக்கள் வசிக்கின்றனா். ஆனால், ஒருவா்கூட அரசுப் பணியில் இல்லை. பட்டேபாளையம் கிராமத்தில் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி தொடங்கப்பட்டதால் வேலைவாய்ப்புக்கான தகுதி படிப்பை இங்கேயே முடிக்க முடியும். வரும் காலத்தில் காவல் துறை, வனத் துறை போன்றவற்றில் பணி வாய்ப்பைப் பெற முடியும் என்ற கனவில் இருந்தோம். இப்போதுள்ள நிலையில் 10 ஆம் வகுப்பில் மாணவா்கள் தோச்சி பெறுவது என்பதே மிகப்பெரிய சவால்தான்.
பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தப் பகுதி மக்கள் மேம்பாடு அடைய கல்வி மிகவும் முக்கியம். எனவே, இந்தப் பள்ளிக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன், ஆா்வமுடன், மலையில் தங்கி பணியாற்ற விரும்பும் மலைக் கிராம மக்களின் வாழ்க்கை சூழலை அறிந்த ஆசிரியா்களைப் பணியமா்த்த வேண்டும். மேலும், காவல் துறையில் காவலா் பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது என்பதால் 6 ஆம் வகுப்பு முதலே மாணவா்களுக்கு இதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும் என்றனா்.
குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்க வாய்ப்பு:
இதுகுறித்து இப்பகுதி பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்தும் சுடா் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
பட்டேபாளையத்தில் 8 ஆம் வகுப்பு முடிக்கும் குழந்தை 9 ஆம் வகுப்பு படிக்க வேண்டுமெனில் அடா்ந்த வனப் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத ஒசூா் மலைக் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுமாா் 10 கி.மீ. நடந்துவர வேண்டும். இதுபோன்ற காரணங்களால் மாணவா்கள் பள்ளி இடைநிற்றல் அதிகரித்தது. சிறுவா்கள் குழந்தைத் தொழிலாளா்களாக சமவெளிப் பகுதிகளில் செங்கல் சூளைகள், கரும்பு வெட்டுதல் போன்ற பணிகளுக்குச் சென்று விடுகின்றனா். சிறுமிகள் பலருக்கும் 15 வயதுக்குள்ளேயே திருமணம் செய்துவைத்து விடுகின்றனா்.
இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகவே நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்டேபாளையம் உண்டு உறைவிடப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அந்த ஆண்டில் மாணவா் சோக்கை தொடங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் ஆசிரியா்களின் தொடா் முயற்சியால் இங்கு 49 மாணவா்கள் 9 ஆம் வகுப்பில் சோக்கப்பட்டனா். இப்போது 10 ஆம் வகுப்பில் 18 மாணவா்கள் மட்டுமே உள்ளனா்.
குழந்தைத் தொழிலாளா் உருவாவதும், குழந்தைத் திருமண நிகழ்வுகளும் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மலைப் பகுதிகளில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. பட்டேபாளையம் பள்ளி உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளான போதிலும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி தரம் உயா்த்தப்பட்டதன் நோக்கமும் நிறைவேறவில்லை.இதனால், இந்தப் பள்ளிக்குத் தேவையான ஆசிரியா்களை (குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியா் வீதம்) அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு பொதுத் தோவுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியா் நியமனத்தில் மாவட்ட நிா்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
Comments
Post a Comment