நிலாவைக்காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம் மாறி இன்று ஆராய்ச்சிக்காக நிலவுக்கே விண்கலத்தை அனுப்பி அசத்தியுள்ளனர் நம் இந்தியப் பெண்கள்.
நிலவின் தெற்கு பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லை பதித்திருக்கிறது இஸ்ரோ. அத்துடன் இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம் என்ற பெருமையையும் சந்திரயான் 2 பெற்றிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவீத பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப்பணிகளில் வெறும் 15 சதவித பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் சுமார் 30 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி அசத்தியிருக்கிறது இஸ்ரோ. தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் -2 விண்கலனை உருவாக்கிய குழுவில் 30 சதவீதம் பெண்கள்தான் இடம்பிடித்துள்ளனர். அது மட்டுமின்றி சந்திரயான் 2 விண்கலன் உருவாக்கத்தில் திட்ட இயக்குனர்களே 2 பெண்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநரகள்் என்ற பெருமையை முத்தையா வனிதா மற்றும் ரிது கரிதால் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் திட்ட இயக்குனர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார். பின்னர், சந்திரயான் -1 இன் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி தற்போது வெற்றி கண்டிருக்கிறார். சந்திரயான் -2 இன் மற்றொரு பெண் திட்ட இயக்குநரான ரிது கரிதால் இந்தியாவின் 'ராக்கெட் பெண்' என்ற பெருமைகொண்டவர். மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கான இஸ்ரோ குழுவின் விருதைப் பெற்றிருப்பவர். இருவரும் விண்வெளி ஆராய்ச்சிப்பணிகளில் பல ஆண்டு கால அனுபவமிக்கவர்கள்.
திட்ட இயக்குனர் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணிநேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதோடு மட்டுமின்றி, தேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்ற பொறுப்பும் அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை
தலைநிமிரச் செய்துள்ளனர் நம் நாட்டுப்பெண்கள். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவிற்கு பட்ஜெட் போடும் இடத்தில் ஓர் பெண் இருந்து அசத்திக்கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி ஆராய்ச்சியிலும் பெண்களின் சாதனை, உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.
Comments
Post a Comment