அங்கன்வாடிகளில் புதிதாக துவக்கப்படும், எல்.கே.ஜி., வகுப்பில் பாடம் எடுக்க, 2,400 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், ஆங்கில வகுப்புகள் துவங்க வேண்டும்' என, பல்வேறு மாவட்டங்களின் பெற்றோர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை ஆங்கில வழியில் நடத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளிகள் அருகேயுள்ள, 2,381 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், எல்.கே.ஜி., வகுப்புகளை துவக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. இந்த அங்கன் வாடிகளில் வரும், 3ம் தேதி முதல், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2,381 அங்கன்வாடிகளிலும், எல்.கே.ஜி., பாடம் நடத்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
Comments
Post a Comment