தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் விலகல் பொறியியல் கலந்தாய்வில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் அன்பழகன் பேட்டி
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் விலகியதால் கலந்தாய்வில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று நடந்த பள்ளி விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அண்ணா பல்கலை துணைவேந்தர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில், தமிழ்நாடு தொழில்நுட்ப கவுன்சிலை சேர்ந்த 2 அதிகாரிகள், 2 பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அக்குழுவிற்கு அண்ணா பல்கலை துணைவேந்தரே தலைவராக இருந்து வருகிறார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்க ஆணையரை, இணை தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.
கூடுதல் பலம் சேர்க்கவே, இணை தலைவர் நியமிக்கப்பட்டார். இதனால் தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தரை அரசு நீக்கவில்லை.
ஆனால், துணைவேந்தர் சூரப்பா, எதற்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் விலகியதால் வரக்கூடிய கலந்தாய்வுகளில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்
Comments
Post a Comment