தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் திருவள்ளூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம், பொன்னேரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது:
தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு அவர், அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்.
தமிழகத்திலுள்ள பள்ளியில் பயிலும் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன.
15 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதற்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதன்கிழமை (பிப். 27) தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வி தொடங்கப்பட உள்ளது.
அதன் மூலம் படிக்கும்போதே வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி மற்றும் இணையதள சேவை செய்து தரப்படும் என்றார் அவர்.
முன்னதாக, பொன்னேரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அட்டைகளை அவர் வழங்கினார்.
Comments
Post a Comment