8, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.
அப்போது, இங்கு போதிய கட்டமைப்பு இல்லை என்று சிலர் வேறு மாநிலங்களில் தேர்வு எழுதவைக்கப்பட்டனர்.
ஆனால், இந்த ஆண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத முடியும். இது குறித்து மத்திய நீட் மையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) பொதுத் தேர்வு தொடங்குகிறது.
மாணவ, மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றித் தேர்வுகளை எழுதலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போது 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே 5 ஆயிரம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து 25 நாள்கள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுத் தேர்வுகளுக்குப் பிறகே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது.
ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பல முடிவுகளை அரசு மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15.80 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம்.
விரைவில் அது கிடைக்கும்.
தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கலாம் என்றார்.
Comments
Post a Comment