தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, 'ஹை - டெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், கல்வித் தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாடத்திட்டம் மாற்றப்பட்டு, பாடப் புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு மற்றும், 'பார் கோடு' இணைத்து, பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பார் கோடுகளை பயன்படுத்தி, வீடியோவாகவும் பாடத்தின் முக்கிய அம்சங்களை பார்க்க முடியும்.
அதுபோல, தமிழகம் முழுவதும், 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு, 30 ஆயிரம், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கற்றல் திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மத்திய அரசு நிதி உதவியுடன், இந்த திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், 'டெண்டர்' விடுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த முடியாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை ஏற்று, ஐ.சி.டி., திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹை - டெக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக, 420 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில், சர்வதேச அளவில், பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வகங்களில், தலா, 10 கணினிகள் வீதம், மொத்தம், 60 ஆயிரத்து, 290 கணினிகள், இணையதளம், 'வை - பை' வசதியுடன் இடம் பெறும்.
Comments
Post a Comment