மதுரை: தமிழகத்தில், அரசுப் பணித் தேர்வு நடைமுறைகளில் மோசடி நடந்துள்ளதாக, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு மற்றும், சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதி துறை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., தனித்தனியே மேற்கொள்கின்றன.தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
குறைந்த மதிப்பெண்
ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், 'கோடிங் சீட்'
எனும், விடைத்தாள் நகல் அச்சிட்டு வழங்குகிறது. அவற்றை மதிப்பிட கம்ப்யூட்டரில், 'ஸ்கேன்' செய்கின்றனர்.புரோக்கர்கள் மூலம் பேரம் பேசி, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக வேறு, 'கோடிங் சீட்'டை மாற்றி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகமதிப்பெண் வழங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற தகுதியான நபர்களுக்கு, குறைந்த மதிப்பெண் வழங்கி மோசடி நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட ஒருவர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். அங்கிருந்து, டி.ஆர்.பி.,க்கு புகார் பரிந்துரைக்கப்பட்டது. மோசடி மூலம், 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணைக்குழு
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில், அரசுப் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் மோசடிகளை தவிர்க்க, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்டஅரசு அதிகாரிகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தற்போது பதிவான வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் அல்லது சி,பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பதிவாளர் குறிப்பிட்டார்.இதை நீதிபதிகள், என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.நீதிபதிகள், 'இச்சம்பவம் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. தவறு செய்தவர்கள் தப்பி விடாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஒருவரை தேர்வு செய்ய, 12.5 லட்சம் ரூபாய் வரை பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது'என்றனர்.பின், தமிழக தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், டி.என்.பி.எஸ்.சி., தலைவர், டி.ஆர்.பி., செயலர், சி.பி.ஐ.,இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, பிப்., 16க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Comments
Post a Comment