தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 66.1 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, விடுபட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வீடுவீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
போலியோ என்கிற இளம் பிள்ளை வாதத்தை ஒழிக்கும் விதமாக ஆண்டுதோறும் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28), மார்ச் 11 ஆகிய இரண்டு தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
43 ஆயிரம் மையங்கள்-2 லட்சம் பணியாளர்கள்: மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 40 ஆயிரத்து 399 மையங்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் ஆயிரத்து 652 மையங்கள், தொலைதூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஆகியன மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில், சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடதுகை சுண்டு விரவில் மை வைக்கப்பட்டது. இந்தப் பணியில் 3 ஆயிரம் வாகனங்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
66 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கல்: தமிழகம் முழுவதும் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 66.1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் இது 93 சதவீதமாகும்.
விடுபட்டோருக்கு சொட்டு மருந்து: விடுபட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு திங்கள்,செவ்வாய்க்கிழமைகளில்
(ஜன. 29, 30) போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, சுகாதாரத் துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு நாள்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு: கடந்த ஆண்டு நடைபெற்ற முகாம்களின் மூலம் 71.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டு தவணையாக நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு ரூ. 9.90 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
முதல்வர் இல்லத்தில்... சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், முதல்வர்
எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடக்கி வைத்தார்.
Comments
Post a Comment