மும்பை இளைஞர் 26 வயது அமான், வழக்கம் போல இரவு சாப்பாட்டுக்குப் பின் குட்டியாய் ஒரு வாக்கிங் சென்று வந்த பிறகே தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் தனது வீட்டில், இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வாக்கிங் செல்லத் தெருவில் இறங்கினார், சற்று தூரத்தில் தெரு முக்கு தாண்டும் போது எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஓலம் போன்ற பரிதாபச் சிணுங்கல் காதில் விழவே முதலில் அதை ஏதோ பூனை அழுகிறது போலும் என்று புறம் தள்ளியவர் மீண்டும் தனது வாக்கிங்கைத் தொடரப் போனார். ஆனால் அவரால் அந்த ஓலத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. பூனையாகவே இருந்தாலும் கூட ‘தானொரு விலங்குகள் நேசன் என்பதால்... ஏதாவது பூனைக்கு அடிபட்டு, காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் அது அழுகிறது போலும் என்றெண்ணி சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். கிட்டெ நெருங்க, நெருங்க அந்த ஓசை இன்னும் அதிகரிக்கவே அருகில் சென்றார். அங்கே தெருமுனையில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு மூடப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்றுணர்ந்து அமான் அதைத் திறக்க முயற்சித்தார். சற்று சிரமப்பட்டேனும் ஆட்டோவைத் திறந்து உள்ளே பூனையைத் தேடினால், அதுவரை தீனமான குரலில் அழுது கொண்டிருந்தது பூனை அல்ல பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்த ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை! என்று தெரிய வந்ததும் அமான் முதலில் திகிலடைந்து விட்டார்.
அவரால் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுச் செல்லவும் முடியவில்லை. பிறந்த சிசுவை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. சில நொடிகள் திக் பிரமை பிடித்தது போல் நின்று விட்டு குழந்தையைப் புகைப்படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்... வாக்கிங் செல்கையில் குழந்தை கிடைத்த செய்தியை தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து என்ன செய்வது என்று புரியவில்லை. நண்பர்களே எனக்கு உதவுங்கள் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த இடத்தில் தான் நாம் அமானின் செயலைப் பாராட்ட வேண்டும். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்திருந்தால் இமான் போலவே அந்தக் குழந்தையின் பொறுப்பை நமதாக ஏற்றுக் கொண்டவர்களாக இருப்போம்?! என யோசியுங்கள்.
பெரும்பாலானோரால் நிச்சயமாக அமானைப் போல குழந்தைக்கு பாதுகாப்பான ஒரு ஏற்பாட்டைச் செய்யும் வரை தங்களது அன்றாட வேலைகளை ஒத்திப் போட்டு விட்டு காத்திருந்திருக்க முடியுமா? அல்லது காத்திருக்கும் எண்ணமாவது பலருக்கு வந்திருக்குமா? என்பதே பெருத்த ஐயத்திற்குரிய விஷயமே! ஆனால் அமான் அந்தக் குழந்தையை கை விடவில்லை. இத்தனைக்கும் இம்மாதிரியான வாய்ப்புகளை எல்லாம் பெரும்பாலும் நம்மில் பலர் திரைப்படங்களில் தான் கண்டிருப்போம். ஆனால் அது இப்படி கண் முன்னே நிகழும் போது எல்லோரையும் போல அமானுக்கும் என்ன செய்வதென்று தெரியாத ஒருவிதக் குழப்பமே மிஞ்சியிருக்கிறது. கையில் குழந்தையுடன் அமான் தெருவில் நின்று கொண்டு அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்த போது அவரைக் கடந்து சென்ற நம்மைப் போன மக்கள் அனைவருமே கூட ஆச்சர்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு கடந்து சென்றார்களே தவிர பெரும்பாலானோர் அமானுக்கு உதவ முன்வரவில்லையாம். முடிவில் அமான், தனக்கு தகவல் தந்து உதவிய ஒரு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் தானாகவே குழந்தையின் பாதுகாப்புக்கு ஒரு உரிய வழியைக் கண்டறிந்தார். ஆம், கடைசியில் மும்பை காவல்துறையின் உதவியை நாடினார் அமான்.
காவல்துறையின் உடனடி நடவடிக்கையை அடுத்து, இப்போது அந்தப் பிஞ்சு சிசு பாதுகாப்பாக ஒரு அரசுக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. குழந்தைக்கு கடுமையான சளி பாதிப்பு இருப்பதால் மருத்துவமனை சிகிச்சைக்கு தற்போது உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாளை அதற்கொரு நல்ல பெற்றோர் கிடைக்கலாம்.
Comments
Post a Comment