Skip to main content

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்புடையதுதான் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.28) நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் பங்கேற்றுப் பேசியதாவது:-
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம்: இந்திய அளவில் இப்போது 799 பல்கலைக்கழகங்களும், 39,071 கல்லூரிகளும், 11,923 கல்வி நிறுவனங்களும் உள்ளன.
இவற்றின் மூலம் 3.46 கோடி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுகின்றனர். இதனால் உயர் கல்வியில் 24.5 சதவீத ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. இதில், மாநில அளவில் ஒப்பிடும்போது, தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம் ஆகும்.
தொலைநிலைக் கல்வியிலும்... இதே போன்று அதிக அளவில் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலமும் தமிழகம்தான். இங்கு 19 தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உயர் கல்வி பெறுபவர்களில் 11.05 சதவீதத்தினர் இந்த தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உயர் கல்வி பெறுகின்றனர். அதாவது, 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் தொலைநிலைக் கல்வி மூலம் உயர் கல்வி பெறுகின்றனர்.
கவலை வேண்டாம்: இவ்வாறு தொலைநிலை மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதா என்ற சந்தேகம் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. முறையாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, தொலைநிலை அல்லது தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகப் பெறப்படும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்புடையதாகும். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
மொத்தம் 16,879 மாணவர்களுக்கு... முன்னதாக பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 209 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் தங்கப் பதக்கங்களையும் பட்டச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழா மூலம் 4,581 முதுநிலை பட்ட மாணவர்கள், 8,497 இளநிலை பட்ட மாணவர்கள், 3,701 பட்டய மாணவர்கள், 100 முதுநிலை பட்டய மாணவர்கள் என மொத்தம் 16,879 மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காமன்வெல்த் கல்வி ஊடக மைய விருது: மேலும், முதுநிலை கணினி அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்து விளங்கிய பல்கலைக்கழக மாணவி ஆர். வீரலட்சுமிக்கு காமன்வெல்த் கல்வி ஊடக மைய (சி.இ.எம்.சி.ஏ.) விருதும், ரூ. 25 ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசையும் விழாவில் ஆளுநர் வழங்கினார்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் ஆண்டறிக்கையை வாசித்தார். மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் கே.அழகுசுந்தரம், உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
எம்.ஏ. பட்டம் பெற்ற 70 வயது மூதாட்டி
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 70 வயது மூதாட்டி எம்.ஏ. பட்டம் பெற்று சாதித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழா மூலம் 16,879 பேர் பட்டம் பெற்றனர்.
முதல் மதிப்பெண் பெற்ற 209 பேர் உள்பட 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விழாவில் நேரடியாக பட்டச் சான்றிதழைப் பெற்றனர். இவர்களில் 70 வயது மூதாட்டியும் பட்டம் பெற்றார்.
செல்லத்தாயி என்ற அந்த மூதாட்டி, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு மூலம் ஏற்கெனவே பி.ஏ. பட்டம் முடித்தவர். இப்போது எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். விழாவில், பட்டம் பெற்ற அவர் கூறியதாவது:
அந்தக் காலத்திலேயே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், குழந்தைகளைக் கவனிக்க வேண்டும், வேலைக்குச் செல்லவேண்டும் என்பதால், பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் போனது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து இப்போது எம்.ஏ. முடித்திருக்கிறேன். அடுத்து, சட்டப் படிப்பை (எல்.எல்.பி.) மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். படிப்பின் மீதான ஆர்வத்தை யாராலும் குறைக்க முடியாது என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...