ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியை நிரந்தரமாக செல்லுபடியாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை என கூறினார். அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகள் தான் செல்லும் என்பதை மாற்றி நிரந்தரமாக செல்லும் என அறிவிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்றார். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கைப்படும் என்று அமைச்சர் செங்கோட்டைன் எச்சரித்தார். 10,12ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலமாகவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.